Showing posts with label மெளஸ். Show all posts
Showing posts with label மெளஸ். Show all posts

Thursday, November 25, 2010

மெளஸ்

1968ல் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபார்ட் பல்கலைகழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மௌஸ் சென்ற வருடம் தன் நாற்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடியது.நாம் தினமும் கையில் வைத்துக்கொண்டு கணினி எனும் இயந்திரத்தை ஆட்டிப் படைக்கின்றோமே, அந்த மௌஸ்ஸைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே மௌஸ் இருந்ததா என்ன?

ஆமாம். டக்லஸ் எங்கெல்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. மனிதனுக்கும் கணினிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையை சுலபமாக்குவதற்காகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் மௌஸ் மரத்தால் ஆனது. ஒரு பெரிய செவ்வகத்தைப் போல இருக்கும்! டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி ஒரு டெமோ மூலம் தன் மௌஸை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் டக்லஸ். 'டெமோக்களின் அன்னை', அதாவது 'Mother of All Demos' என்று அனைவராலும் பாராட்டப்பட்டது. ஏ.ஆர்.சி என்று அழைக்கப்படும் Augmentation Research Centerல் வேலை பார்த்தவர்களின் கூட்டு முயற்சியாக இருந்தாலும், அதிக பெயரும் புகழும் பெற்றது என்னவோ டக்லஸ்தான். இன்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் கிடைக்கும் மௌஸ்களைப் போல் வண்ண வண்ண பட்டன்கள் எல்லாம் அதில் கிடையாது. ஒரேயொரு பட்டன்தான். நிறைய சக்கரங்கள் பொருத்திய மரப்பெட்டி! ஆனால், அன்று அது ஏற்படுத்திய பரபரப்பு அளவில்லாதது. கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று, வரலாற்றை நினைவு கூறும் விதமாக, மௌஸின் நாற்பதாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது, அதே ஸ்டான்ஃபார்ட் பல்கலைக்கழகத்தில்.

அது சரி, அது என்ன பெயர் "மௌஸ்"? டக்லஸ் ஒரு பேட்டியில் சொல்கிறார். "முதல் மாநாட்டின் சமயம், எங்கள் கையில் அந்த புது கேட்ஜெட் இருந்தது. நாங்கள் அந்த சமயத்தில் அதற்கு என்ன பெயர் வைப்பது என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை. ஒரு சிறிய மரக்கட்டை போல் இருக்கும். அதன் நுனியிலிருந்து ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. மாநாட்டில் இருந்த யாரோ ஒருவர் அதைப் பார்த்து பயந்துவிட்டு 'எலி.. எலி' என்று கத்தினார் - கயிற்றை வால் என்று நினைத்துக் கொண்டு! அப்பொழுது வந்த பெயர்தான் மௌஸ்! அன்றிலிருந்து நாங்களும் மௌஸ் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டோம்." சில வருடங்களுக்குப் பிறகு, பில் இங்கிலிஷ் 'Computer Aided Display control' என்ற அவர்தம் புத்தகத்தில் மௌஸ் என்று பெயர் சூட்டுகின்றார்.

அந்த மரப்பெட்டி மெல்ல மெல்ல அழகாக மாறியது. முதல் மாற்றம் வந்தது மௌஸின் சக்கரத்தில்தான். அனைத்து சக்கரங்களையும் அகற்றி விட்டு, எல்லா திசைகளிலும் நகரக் கூடிய ஒரு பந்தை பொருத்தினார்கள். அதன் பிறகு ஆப்டிகல் மௌஸ் வர ஆரம்பித்தது. முதலில், டையோடுகளை பயன்படுத்தினார்கள். தொழில்நுட்பம் வளர வளர சென்சர்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். தற்பொழுது இன்ஃப்ரா ரெட் கதிர்வீச்சுகளும், லேசர் கதிர்களும் உபயோகத்தில் இருக்கின்றன.

இன்று மௌஸ் எவ்வளவு தேர்ச்சி அடைந்துவிட்டது என்பதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோமே. ஒரே ஒரு பட்டனில் ஆரம்பித்தது, இன்று நான்கைந்து பட்டன்கள் வரை வளர்ந்து நிற்கின்றது! இதற்கெல்லாம் நடுவில் 'ஆப்பிள்' கம்பெனி, 'நானும் புதிதாக செய்கிறேன்' என்ற பெயரில் 'மைட்டி மௌஸ்' என்றொன்றை விற்கிறது. மற்ற மௌஸ்களைப் போல, வயர்லெஸ் வடிவத்தில் இதுவும் கிடைக்கின்றது. 'வால் வெட்டப்பட்ட எலி' என்று டக்லஸ் விளக்கம் தருவாரோ!!

அது சரி, டக்லஸ் இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்? 'பூட்ஸ்ட்ராப் இன்ஸ்டிட்யூட்' என்றொன்றை 1988ல் ஆரம்பித்தார். பிறகு அது 'டக் எங்கெல்பர்ட் இன்ஸ்டிட்யூட்' என பெயர் மாற்றப்பட்டது. டக்லஸின் 'கலெக்டிவ் ஐக்யூ' எண்ணங்களின் மூலம் கணிப்பொறி துறையில் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. கலெக்டிவ் ஐக்யூ என்றால் "கூட்டாக வேலை பார்ப்பது" என்று அர்த்தமாம்.

டக்லஸ் இன்னும் கலிஃபோர்னியாவில்தான் இருக்கிறார். எண்பத்தி மூன்று வயதிலும் துடிப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.